மஸ்ஜித் நிர்வாகிகளே..!
மவ்லவிமாரின் கொடுப்பனவு விடயத்தில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.

அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..!
அன்மைக் காலமாக மஸ்ஜித் இமாம்களின் கொடுப்பனவு பற்றி மஸ்ஜித் நிர்வாகிகள் அதிகம் பேசுவதை உள்ளூர் மட்டத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

Covid19 காரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். பல தொழிற்சாலைகள் , மற்றும் வியாபார நிலையங்கள் மூடப்பட்டதின் காரணமாக பலரும் தொழிலை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதே பின்னனியில் மஜ்ஜிதில் பணிபுரியும் இமாம்களில் சிலரை சில மஸ்ஜித் நிர்வாகங்கள் சம்பளத்தைக் காரணமாகக் கூறி பணி நீக்கம் செய்துள்ள நிலையில் இன்னும் சில நிர்வாகங்கள் தற்போது வரை கொடுக்கப்பட்டுக் கொண்டுள்ள மாதாந்தக் கொடுப்பனவைக் குறைப்பது பற்றி ஆலோசித்துக் கொண்டுள்ளது.

இலங்கையில் அதிகமான மஸ்ஜித்களில் இமாம்களுக்கான அதிகூடிய மாதாந்தக் கொடுப்பனவாக 25000/30000 ஆயிரம் ரூபாக்களே வழங்கப்படுகின்றது. ஒரு சில மஸ்ஜித்களில் மாத்திரமே சற்று மனநிறைவான சம்பளம் (40,000 ரூபா) வழங்கப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் பொருட்களின் விலைவாசிகள் அதிகரித்துக் காணப்படும் நிலையில் இப்படியான தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியாத அளவு சம்பளத்தைப் பெற்று இரண்டு மூன்று குழந்தைகளுடன் வாழ்கையைக் கடத்திக் கொண்டுள்ள இமாம்களின் மாதாந்தக் கொடுப்பனவில் இன்னும் குறைப்பது என்பது எந்த வகையில் நியாயம்..? என்பது உண்மையில் எனக்குப் புரிய வில்லை.

பொதுவாக மஸ்ஜித்களில் பணிபுரியும் இமாம்கள் 24 மணி நேரமும் மஸ்ஜிதை கண்காணித்துக் கொண்டு சேவையில் இருக்க வேண்டும். மாதத்தில் குறைந்தது நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்படும். அந்த நான்கு நாட்களுக்குள் தான் அவர் தனது தாய் தந்தை, மனைவியின் உறவுகள், பிள்ளைகளின் பாடாசாலை விவகாரங்கள், குடும்பத்தில் நடைபெறும் சந்தேஷமான நிகழ்வுகள், என அனைத்தையும் கவனிக்க வேண்டும். இப்படியான கடுமையான கட்டுப்பாடுகளுடன் தான் மஸ்ஜிதில் பணிபுரியும் இமாம்கள் அங்கு இருக்கின்றனர். ஒரு சுய தொழில் செய்து கொண்டு மஸ்ஜிதையும் கவனிப்பதென்பது சாத்தியமற்ற விடயமாகும் . மஸ்ஜித் நிர்வாகங்கள் அதற்கான அனுமதிகளை வழங்கப் போவதுமில்லை.

இந்நிலையில் உள்ள ஒரு இமாமின் கொடுப்பனவில் குறைத்தல் என்பது எந்த அடிப்படையில் நியாயம்..? சாதாரணமாக ஒரு கடையில் வேலை செய்கின்றவர் அக்கடையில் கிட்டத்தட்ட ஆறு, ஏழு மாதங்களை அல்லது ஒரு வருடத்தைக் கடத்தி விட்டால் சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் மஸ்ஜித் இமாம்கள் ஒரே மஸ்ஜிதில் ஜந்து வருடங்களைக் கடத்தினாலும் அதே சம்பளம் தான் கிடைக்கும். முடியுமென்றால் ஏற்கெனவே கொடுக்கப்படும் கொடுப்பனவில் குறைக்க முயற்சிப்பார்களே தவிர மகிழ்ச்சிகரமான மனநிறைவான கொடுப்பனவை வழங்க முன்வர மாட்டார்கள்.

இதனால் பாதிக்கப்படுவோர் யார்..?

மஸ்ஜித்கள் சமூக உருவாக்கத்தில் பெறும் பங்குவகிக்க வேண்டிய இடங்களாகும். ஒரு மஸ்ஜிதை சூழ உள்ள சமூகத்தை சரிவர கட்டியெழுப்புவது என்றால் தகைமையுடைய இமாம்களை இணங்கண்டு மஸ்ஜித்களில் பணியமர்த்தல் அவசியமாகும். குறைந்த பட்சம் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தகுந்த வழிகாட்டல்களை வழங்கி, இளைஞர்களை நெறிப்படுத்தி ‘ அல் குர்ஆன் மத்ரஸாக்களைத் திறமையாக செய்யக் கூடிய இமாம்களை இணங்கண்டு இமாமத் பொறுப்பை வழங்க வேண்டும். இத்தகைய திறமையுடைய இமாம்கள் பலர் எமது தஃவாக் களத்திலிருந்து இன்று காணாமல் போய் விட்டார்கள். அதற்குக் காரணம் மஸ்ஜித் நிர்வாகங்களின் இத்தகைய யோசிக்காத நடத்தைகளாகும்.

இன்று தகுதியுடைய மவ்லவிமாரைத் தேடுவதை விட்டு விட்டு சம்பளம் குறைவாகக் கொடுக்க முடியுமான மவ்லவிகளைத் தான் மஸ்ஜித் நிர்வாகங்களும் தேடுகின்றார்கள். அப்படித் தேடப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அர்ப்பணிப்புடன் கடமையை உணர்ந்து செயல்படுவதும் கிடையாது. தங்களின் தேவைகள் நிறைவேறியதும் அந்த இடத்தை விட்டு எந்தக் கடமையுணர்வுமின்றி விலகிச் சென்று விடுவார்கள். இன்று வருடத்துக்கு நான்கு, ஐந்து மவ்லவிகள் ஒவ்வொரு மஸ்ஜிதுக்கும் வந்து போவது சாதாரணமாக மாறிவிட்டது. இதனால் அல் குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். மஸ்ஜித் நிர்வாகங்களின் இத்தகைய செயற்பாடுகள் மார்க்கக் கல்வியை விட்டுப் பிள்ளைகளை தூரமாக்கும் சிந்தனைப் போக்காகும் என்பதை மக்கள் உணர வேண்டும்.

மஸ்ஜித் நிர்வாகங்கள் எப்போது மவ்லவிமார்களின் பொருளாதார நிலைகளை அறிந்து அதற்கேற்பக் கொடுப்பனவுகளை மனநிறைவாக வழங்குகின்றார்களோ அன்று தான் தகுதி வாய்ந்த இமாம்கள் மஸ்ஜித்களில் பணிபுரிய முன்வருவார்கள் . நாளுக்கு நாள் குடும்பக் கஷ்டம் காரணமாக மஸ்ஜித்களை விட்டு வெளியேறி சுய தொழில்களில் ஈடுபடும் மவ்லவிமார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது தொடருமாக இருந்தால் தகுதியற்றோர் மஸ்ஜித்களில் பணியமர்த்தப்படும் காலம் வெகு தொலைவிலில்லை.

📌முடிவுரை:
தகுதி வாய்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் இமாம்களைத் தேடி மஸ்ஜித்களில் பணியமர்த்துங்கள், அவர்களை அழைப்புப் பணிக்காக நன்றாக பயன்படுத்துங்கள். உங்களின் நாளாந்த, மாதாந்த தேவைகளை உணர்ந்து நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் எப்படி மனநிறைவான கொடுப்பனவை எதிர்பார்கின்றீர்களோ அப்படியான சிறந்த கொடுப்பனவை இமாம்களுக்கு வழங்குங்கள். மஸ்ஜித் நிர்வாகங்கள் தமக்குள் முரண்படாது முயற்சித்தால் இது இலகுவான காரியமே. அஹ்லாக்கான முறையில் நம்மிடம் பணிபுரியும் இமாமும் ஒரு மனிதனே.. அவருக்கும் குடும்பத் தேவைகள் இருக்கிறது. என்பதை உணர்ந்து அவர்களுடன் நடந்து கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் சிறந்த ஒரு மாற்றத்தை உங்கள் பகுதிகளில் நீங்கள் எதிர்பார்கலாம்.

🎯குறிப்பு:
இவ்வாக்கம் எந்த ஒரு மஸ்ஜித் நிர்வாகத்தையும் தாக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது கிடையாது. மவ்லவி மார்களுக்கு மனநிறைவான சிறந்த கொடுப்பனவுகளை வழங்கி அவர்களுடன் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளும் சில நிர்வாகிகளும் இருக்கத் தான் செய்கின்றார்கள் . அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிய வேண்டும். மற்றவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

✍️மஸ்ஜித் பேஷ் இமாம்களின் குரலாக:
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
அட்டுலுகம
இலங்கை
2020/08/16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *