உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது பலியிட வேண்டும்..?

அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ

ஒரு அமலை நாம் நிறைவேற்றும் போது அந்த அமலை எப்போது, எப்படிச் செய்வது என்ற அறிவு எங்களிடம் இருப்பது அவசியமாகும்.அந்த அறிவு இல்லாமல் நாம் ஒரு அமலை நிறைவேற்றும் போது பல நன்மைகளை தவற விட்டுவிடுவோம் . சில வேலை முழு நன்மைகளையும் தவற விடும் நிலைகள் கூட ஏற்பட்டு விடலாம்.

அதனால் ஒரு அமலை நாம் செய்ய முன் அந்த அமல் குறித்து சொல்லப்பட்டுள்ள முழுத் தகவல்களையும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் . பின்னர் அந்த அமலை அதற்குரிய முறையில் செய்து அந்த அமலின் சிறப்புக்களையும், கூலிகளையும்
முழுமையாக அடைந்துகொள்ள
முயற்சி செய்ய வேண்டும்.

உதாரணமாக:

ஜும்ஆவுக்குப் போவது ஒவ்வொரு ஆண்கள் மீதும் கட்டாயக்கடமை . அதே நேரம் நேர காலத்துடன் போவது மேலதிக சிறப்புக்களைப் பெற்றுத்தரும் காரியம். என்பதைப் போல் உழ்ஹிய்யா வழங்குவது வலியுறுத்தப்பட்ட சுன்னாவாகும். அதனை அதற்கு மிகப் பொறுத்தமான நாளில்
வழங்குவது பல மடங்கு நன்மைகளை எமக்குப் பெற்றுத்தரும் காரியமாகும்.

இன்று முன்னைய காலங்களை விட அதிகமானவர்கள் உழ்ஹிய்யா என்ற
இந்த அமலை நிறைவேற்றுகின்றனர்.
ஆனால் பலரும் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இந்த அமலை நிறைவேற்றுவதில் பொடுபோக்காக செயல்படுகின்றனர். காரணம் துல் ஹஜ் பிறை பத்தினுள் செய்யப்படும் அமல்களுக்குரிய கூலியை
அறியாதமையாகும்.

1) துல்ஹஜ் முதல் பத்து நாற்களின் சிறப்பு.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்தார்.

‘(துல்ஹஜ் பத்து) நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நல்லமல் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அதற்கு ஜிஹாதை விடவுமா?’ என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தன் உயிரையும், பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.

(திர்மிதீ:757)

துல் ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் அமற்களானது அல்லாஹ்விடத்தில் தனது உயிரையும், உடைமைகளையும் இழக்காமல் ஒருவர் செய்த ஜிஹாதை விட மிக விருப்பமானது. எனவே துல் ஹஜ் பிறை பத்தில் நாம் உழ்ஹிய்யா வழங்கினால் தான் ஜிஹாதை விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான அமலை செய்த கூலி எங்களின் உழ்ஹிய்யா என்ற அமலுக்கு கிடைக்கும்.

2) நபி (ஸல்) அவர்கள் தனது உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது அறுத்தார்கள்?

1: நாம் முதலில் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுவோம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
அறவிப்பவர் பராஃ (ரலி)
நூல் புகாரி (951)

2: ஒரு (ஹஜ்ஜுப் பெருநா)ளின் போது (தொழுகை முடிந்த பிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்து விட்டனர். (தொழுகையிலிருந்து திரும்பிய) நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் குர்பானி கொடுத்து விட்டிருப்பதைக் கண்ட போது யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்கு பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி)
நூல் : புகாரி (5500)

3: இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி 5552 அத்தியாயம் : 73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்

4: இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது துல்ஹஜ் 10ஆம் நாள் பல கேள்விகள் கேட்கப்பட்டதற்கு ‘குற்றமில்லை!’ என்றே பதில் கூறினார்கள். ஒருவர் ‘நான் பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்!’ என்று கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (இப்போது) பலியிடுவீராக!’ எனக் கூறினார்கள். பிறகு அவர் ‘நான் மாலை நேரமான பின்பே கல்லெறிந்தேன்!’ என்றதும் நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை!’ என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1735.
அத்தியாயம் : 25. ஹஜ்

3) நபி ஸல் அவர்கள் துல் ஹஜ் பிறை பத்து பெருநாள் தினத்தில் மட்டுமே அறுத்துப் பழியிட்டுள்ளார்கள். வேறு நாட்களில் உழ்ஹிய்யாப் பிராணிகளை அறுத்தமைக்கு சான்றுகள் கிடையாது. எனவே நாமும் அந்நாளில் எமது பலிப்பிராணிகளை பலியிட முயற்சிக்க வேண்டும்.

4) யவ்முன் நஹ்ர் (அறுத்துப் பலியிடும் நாள்)
ஈதுல் அழ்ஹா (அறுத்துப் பலியிடும் பெருநாள்) என்ற பெயர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தைத் தவிர வேறு நாட்களுக்கு குறிப்பிட்டு கூறப்பவில்லை.

அபூ பக்ரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10-ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ எனக் கேட்டார்கள். நாங்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது (பலியிடுவதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?’ என்றனர். நாங்கள் ‘ஆம்!’ என்றோம். பிறகு ‘இது எந்த மாதம்?’ என அவர்கள் கேட்டதும் நாங்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்தார்கள். பிறகு, ‘இது துல்ஹஜ் மாதம் அல்லவா?’ என அவர்கள் கேட்க, நாங்கள் ‘ஆம்!’ என்றோம்.
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

ஸஹீஹ் புகாரி : 1740.
அத்தியாயம் : 25. ஹஜ்

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு அடுத்தபடியாக
செய்த அமல் உழ்ஹிய்யாப் பிராணிகளை அறுத்துப் பலியடல் என்ற அமலைத் தான் என்பதை மேலே நான் குறிப்பிட்ட ஹதீஸ்கள் எங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றன. எந்த அளவுக்கு என்றால் தொழும் திடலுக்குத் தமது உழ்ஹிய்யாப் பிராணிகளை அவர்கள் கொண்டு சென்று திடலிலே அந்த வணக்கத்தை நிறைவேற்றி உள்ளார்கள் என்பதைக் கூட இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன. அது மாத்திரமின்றி தொழுகைக்கு முன் அறுத்துப் பலியிட்ட தோழரிடம் தொழுகைக்குப் பிறகு அறுக்க சொன்ன செய்தி. மற்றும் மினாவில் ஹஜ்ஜுடைய அமற்களில் சிலதை மாற்றி செய்தவர்களுக்கு பதில் கூறும் போது குர்பானி கொடுக்கமுன் தலையை மலித்த தோழரிடம் அது குற்றமில்லை இப்போது நீங்கள் பலியிடுங்கள் என்று கூறிய செய்திகள் அனைத்தைக் கொண்டும் நபிகளார் (ஸல்) அவர்கள் யவ்முன் நஹ்ரில் உழ்ஹிய்யா கொடுப்பதை வலியுறுத்தியுள்ளார்கள் என்பதை இலகுவாக நாம் புரிந்து கொள்ளமுடியும்.

5) அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில் (துல் ஹஜ் பிறை 11,12’13) அறுத்துப் பலியிட முடியுமா..?

அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில் உழ்ஹிய்யா வழங்க முடியாது என்போரின் வாதம் :

யவ்முன் நஹ்ர் மாத்திரம் தான் அறுத்துப் பலியிட முடியும். அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில் அறுப்பது உழ்ஹிய்யாவின் கூலியைப் பெற்றுத்தராது . நபி இப்ராஹீம் (அலை ) அவர்களின் வரலாற்றில் நடந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமே உழ்ஹிய்யா மார்கமாக்கப்பட்டுள்ளது. நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு அல்லாஹ் இஸ்மாஈல் அலை அவர்களுக்குப் பகரமாக பலிப்பிராணியை வழங்கிய நாளும் அவர்கள் அந்தப்பலிப் பிராணியை அறுத்துப் பலியிட்ட நாளும் ஒரு நாளாகும். எனவே நான்கு நாட்களிலும் அறுப்பது இப்ராஹீம் நபியின் வழிமுறைக்கு மாற்றமான காரியம் என்பது இவர்களின் வாதமாகும்.

1:அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் அனைத்தும் அறுப்பதற்குரிய நாட்கள் என்ற கருத்தில் வரும் அனைத்து ஹதீஸ்களும் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்ட பலஹீனமான அறிவிப்பாளர்களைக் கொண்ட ஹதீஸ்களாகும்.

2:அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களைப் பற்றி நபிகளார் சொன்ன செய்திகள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அய்யாமுத் தஷ்ரீக்” (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.
இதை நுபைஷா பின் அம்ர் பின் அவ்ஃப் அல்ஹுதலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் நுபைஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், “அறிவிப்பாளர் காலித் அல்ஹத்தா (ரஹ்) அவர்கள், நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அபுல்மலீஹ் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அப்போது மேற்கண்ட ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். மேலும், (“பருகுவதற்கும்” என்பதற்குப் பின்னால்) “இறைவனை நினைவுகூர்(ந்து திக்ர் செய்)வதற்கும் உரிய நாளாகும்” என்பதை அதிகப்படியாக அறிவித்தார்கள்” என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2099.
அத்தியாயம் : 13. நோன்பு

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் “அய்யாமுத் தஷ்ரீக்” நாட்களில் அனுப்பி, “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேரெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; “மினா”வின் நாட்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும்” என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில்”எங்கள் இருவரையும் அறிவிக்கச் செய்தார்கள்” எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம்2100 அத்தியாயம் : 13. நோன்பு

அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்ட காரியமாகும்.

3: அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் அறுத்துப் பலியிடுவது கூடும் என்பதற்கான சான்று.

சூரதுல் ஹஜ்ஜின் 26 முதல் 30 வரையான தொடர் வசனங்கள் ஹஜ்ஜைப் பற்றி பேசுகின்றது. இந்த வசனங்களை சிந்தித்தால் அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில் அறுப்பது தொடார்பில் நாம் தெளிவான ஒரு நிலைப்பாட்டைப் பெறலாம்.

அல்லாஹ் கூறுகிறான்:

لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِىْۤ اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ‌‌ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآٮِٕسَ الْفَقِيْـرَ‏

தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
(அல்குர்ஆன் : 22:28)

மேலுள்ள வசனத்தில் அல்லாஹ் தெளிவாகவே சொல்லிவிட்டான் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அவனின் பெயர்கூறுவதற்கு அவர்கள் வருவார்கள் என்று . எனவே குறிப்பிட்ட நாட்கள் (அய்யாமின் மஃலூமாத்) என்பது எந்த நாட்களைக் குறிக்கும்.? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுகின்றன. அவற்றில் மிக சரியான கருத்தாக அறுத்துப் பலியிட முடியுமான முதல் நாள் (யவ்முன் நஹ்ர்) தொடக்கம் ஹஜ்ஜுடைய ஏனைய மூன்று நாட்களையும் (அய்யாமுத் தஷ்ரீக்) தான் அது குறிக்கும் என்ற கருத்தை அந்த வசனத்தின் வெளிப்படையான விளக்கத்தை அடிப்படையாக கொண்டு நான் சரிகாண்கிறேன்.

இக்கருத்தை மறுக்கக் கூடியவர்கள் 22:28 வசனத்துக்கு மாற்றுக் கருத்தை வழங்குகின்றார்கள். அந்த வசனம் அறுப்பதைப் பற்றி பேசவில்லை “சாதுவான பிராணிகளை அல்லாஹ் எமக்கு தந்தமைக்கு நன்றி செலுத்துவது ” பற்றித்தான் பேசுகின்றது என்பது அவர்களின் வாதமாகும்.

இந்த வாதம் ஏற்புடையதா ..? என்பதை இலகுவாக அல் குர்ஆனிய மொழிநடையை அவதானித்து நாம் விளங்க முடியும். பிராணிகளின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறுதல் என்ற கருத்தைத்தரும் பல வசனங்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. அவை அனைத்துமே “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதைப் பற்றியே பேசுகின்றது. அதே கருத்தைத்தான் 22:28 வசனத்திலும் அல்லாஹ் சொல்லியுள்ளான். மாறாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தல் என்ற கருத்தை இந்த வசனம் தரவில்லை.

உதாரணங்கள் சில:

فَـكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ اِنْ كُنْتُمْ بِاٰيٰتِهٖ مُؤْمِنِيْنَ‏

(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.
(அல்குர்ஆன் : 6:118)

وَمَا لَـكُمْ اَلَّا تَاْكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَـكُمْ مَّا حَرَّمَ عَلَيْكُمْ اِلَّا مَا اضْطُرِرْتُمْ اِلَيْهِ وَاِنَّ كَثِيْرًا لَّيُضِلُّوْنَ بِاَهْوَآٮِٕهِمْ بِغَيْرِ عِلْمٍ‌ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِالْمُعْتَدِيْنَ‏

அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது?

(அல்குர்ஆன் : 6:119)

وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌ وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ‏

எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் – நிச்சயமாக அது பாவமாகும்;

(அல்குர்ஆன் : 6:121)

🎯முடிவுரை:

துல் ஹஜ் முதல் பத்து நாட்களும் சிறப்புக்குரிய நாட்கள் என்பதால் அந்த சிறப்பை அடைந்து கொள்ளும் முகமாக எங்களுடைய உழ்ஹிய்யா வணக்கத்தையும் துல் ஹஜ் பத்தாம் நாளான யவ்முன் நஹ்ரில் வழங்கிவிட நாம் முயற்சிக்க வேண்டும். நபி ஸல் அவர்களும் நபித் தோழர்களும் ஈதுல்அழ்ஹா பொருநாள் தொழுகை முடிய அடுத்த காரியமாக இந்த அமலைத்தான் நிறைவேற்றி உள்ளார்காள். துல் ஹஜ் பத்தாம் நாள் உழ்ஹிய்யா கொடுக்க தவறியவர் துல் ஹஜ் பிறை பதின் மூன்றுக்குள் (அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில்) 22:28 வசனத்தின்படி உழ்ஹிய்யா வழங்க முடியும்.

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குப் பலிப்பிராணியை வழங்கிய நாளில் வழங்கிய நேரத்தில் அவர் பிராணியைப் பலியிட்டார். அதற்காக நாமும் ஒரே நாளில் எமது பலிப்பிராணிகளை பலியிட வேண்டும் என்பது அறிவார்ந்த வாதமில்லை. ஒவ்வொரு சமூகத்தாரும் சட்டதிட்டங்களால் வேறுபடுவதுண்டு. உதாரணமாக நபி மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றப்பட்டது முஹர்ரம் பத்தாம்நாளில் அதற்காக மூஸா நபியும் அந்த சமூகமும் நோன்பு நோற்றதும் அதே நாளில் தான் முஹர்ரம் பத்து. ஆனால் நாம் அதற்காக நோன்பு நோற்க வேண்டியது இரு நாட்கள் முஹர்ரம் பிறை ஒன்பது , பத்து இப்படித்தான் அனைத்து விடயங்களும். அல் குர்ஆனையும் ஹதீஸையும் ஒன்றுடன் ஒன்றை மோத விட்டு முரண்பாடாக சித்தரிக்க முயற்சிக்கும் ஷைத்தானிய சிந்தனையாளர்களிடம் இருந்து அல்லாஹ் இந்த சமூகத்தை பாதுகாக்க வேண்டும். குர்பானி என்பது ஹஜ் வணக்கத்தின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை. மறுமை நாள் வரை உம்ரா ஹஜ்ஜில் நுழைந்து விட்டதாக நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

✍நட்புடன்
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
அட்டுலுகம
இலங்கை
2020/07/29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *