துல் ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் அமற்களின் சிறப்புக்கள்.

அடியார்கள் தன்னை நெருங்க வேண்டும் என்பதற்காக இரக்கமான றப்புல் ஆலமீன் பல சந்தர்பங்களை எமக்குத் தந்து அமற்களால் சிறந்தவர்களாக நாம் மாற ஒவ்வொரு கால கட்டத்திலும் வாய்ப்பளிக்கின்றான். அந்த அடிப்படையில் இப்போது நாம் இருக்கக் கூடிய மாதம் புனித மாதங்களில் ஒன்றாகும். இதைத் தொடர்ந்து வர இருக்கும் துல் ஹிஜ்ஜா ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்கையிலும் சுவனத்துக்கான அருவடை காலமாகும்.

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பொதுவாகப் பிறையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அந்த அடிப்படையில் இப்போது நாம் துல் கஃதா மாதத்தின் இறுதிப் பகுதியில் உள்ளோம். அடுத்து
துல் ஹிஜ்ஜா எம்மை வந்தடைய உள்ளது.
எனவே துல் ஹிஜ்ஜா மாதத்தில் இஸ்லாம்
எம்மீது கடமையாக்கியுள்ள ஒரு சில வணக்கங்களை இவ்வாக்கத்தின் மூலம்
உங்கள் சிந்தனைக்கு முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.

அல்லாஹ் கூறுகிறான்.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.!

(📗அல் குர்ஆன் 9:36)

1) புனித மாதங்கள் எவை..?

ஹஜ்ஜத்துல் வதாவில்’ உரையாற்றிய போது) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. (இதற்கு முன் மக்கத்து முஷ்ரிகீன்களும், யூத கிரிஸ்தவர்களும் காலத்தில் மாற்றம் செய்து வந்தார்கள்.)ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து ‘ரஜப்’ மாதம் ஆகும்.
என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 4662.

2) புனித மாதங்களில் நாம் பேண வேண்டியவை.

1: ஜிஹாத் (புனிதப் போர்) செய்யக்கூடாது :

அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான அமற்களில் ஒன்றாக இருக்கக் கூடிய ஜிஹாதையே அல்லாஹ் இம்மாதங்களில் தடை செய்துள்ள போது இப்புனித மாதங்களில் உறவுகளோடு நாம் சண்டை பிடிக்க முடியுமா..? சக முஸ்லிம்களோடு சண்டையிட முடியுமா..? அயல் வீட்டாருடன் சண்டையிட முடியுமா..? வரம்பு மீறாத மாற்று மத சகோதர்களுடன் நாம் சண்டையிட முடியுமா..? இப்படியான காரியங்களில் ஈடுபடுவது இப்புனித மாதங்களைக் கலங்கப்படுத்தும் குற்றமான செயலாகும்.

2: பாவங்களில் ஈடுபடத் தடை:

பொதுவாக முஸ்லிம் என்றாலே பவங்களை விட்டு ஈடேற்றம் பெற்றவனாக எப்போதும் இருக்க வேண்டும். என்றாலும் மனிதன் என்ற அடிப்படையில் சில தவறுகள் அவ்வப்போது எம் வாழ்வில் நிகழ்வதுண்டு. அப்படியான தவறுகள் கூட குறிப்பாக இம்மாதங்களில் நிகழ்ந்துவிடாது கவனமாக இருக்க வேண்டும். இம்மாதங்களில் செய்யப்படும் தவறுகளுக்கு இரண்டு வித பாவங்கள் எழுதப்படும். ஒன்று செய்த தவறுக்கான கூலி.. இரண்டாவது இப்புனித மாதத்தின் புனிதத்தை பேணாதமைக்கான கூலி.

3) துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்.

1: அல்லாஹ் துல் ஹஜ் மாத முதல் பத்து இரவுகளையும் அதன் மீது சத்தியமிட்டு
கண்ணியப் படுத்தியுள்ளான்.
وَلَيَالٍ عَشْرٍۙ‏
பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
(அல்குர்ஆன் : 89:2)

பத்து இரவுகள் என்பது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளாகும். என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

2: இந்தக் காலத்தில் செய்யும் அமற்கள் அல்லாஹ்வுக்கு ஜிஹாதை விட விருப்பமானது.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.

‘(துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நல்லமல் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ஜிஹாதை விடவுமா?’ என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தன் உயிரையும், பொருளையும், பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி 969 அத்தியாயம் : 13.
இரு பெருநாள்கள்

ஜிஹாதின் சிறப்பு:

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படி எதையும் நான் காணவில்லை’. என்று கூறிவிட்டு, ‘அறப்போர் வீரன் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றுவிட்டால் (அவனுக்கு) இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீ உன் வணக்கத் தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும், தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அம்மனிதர், ‘அது யாரால் முடியும்?’ என்று பதிலளித்தார்.
‘அறப்போர் வீரனின் குதிரை, அதைக் கட்டி வைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக்கிடையே (கால்களை உதைத்துக் கொண்டு) சில குதிகள் குதித்துச் சென்றால் அதுவும் அவனுக்கு நற்பலனாக எழுதப்படும்’ என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

ஸஹீஹ் புகாரி 2785 அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்.

குறிப்பு:
ஜிஹாத் என்பது அப்பாவி மக்களைக் கொலை செய்யும் கோலைத் தனமான தற்கொலைத் தாக்குதல் அல்ல . அது தன்னையும், தன் மதத்தையும், தன் நாட்டு மக்களையும் அழிக்கப் படையெடுத்து வரும் எதிரிகளுக்கு எதிராக அரசின் கட்டளைப்படி போர்க் களத்தில் நேருக்கு நேர் அவர்களை எதிர்த்துப் போராடும் இராணுவ நடவடிக்கையே ஜிஹாதாகும். இதையே இஸ்லாம் ஜிஹாத் என்கின்றது. இந்த ஜிஹாதைக் கூட இஸ்லாம் புனிதமாதமாக கூறும் நான்கு மாதங்களில் (துல் கஃதா , துல் ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ) தடை செய்கின்றது. அதிலும் குறிப்பாக துல் ஹஜ் முதல் பத்து நாட்களில் நன்மையான காரியங்களில் ஈடுபடுவதை இஸ்லாம் ஜிஹாதை விட சிறாந்த வணக்கமாகச் சொல்கின்றது.

3: அரபாவுடைய நாள் இந்த நாட்களில் தான் இருக்கின்றது.

ஹஜ் என்றால் அரஃபாவில் தங்குவதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஹாகிம்).

قَالَتْ عَائِشَةُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ((مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمُ الْمَلاَئِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلاَءِ))رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாட்களிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெறுமை பாராட்டுகிறான். “இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2623.
அத்தியாயம் : 15. ஹஜ்

4: யவ்முன் நஹ்ர் அறுத்துப் பலியிடும் நாள் அதிலே தான் இருக்கின்றது.

5: இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் .

والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة لمكان اجتماع أمهات العبادة فيه, وهي الصلاة والصيام والصدقة والحج, ولا يتأتى ذلك في غيره.

துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மகத்தான நாட்களாகும். என சிலாகித்துக் கூறப்பட்டிருப்பதன் காரணம் என்னவெனில், அந்த நாட்களில் தான் பிரதான வணக்க வழிபாடுகள் யாவும் ஒருங்கே அமைந்திருப்பதாகும் . அவையாவன தொழுகை, நோன்பு, ஹஜ், தர்மம், ஆகிய யாவும் இந்த நாட்களில் முக்கிய அமல்களாக நிறை வேற்றப்படுகின்றன. இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் சாத்தியப்பட மாட்டாது.

( فتح الباري بشرح صحيح البخاري، 2/534 )

4) துல் ஹஜ் முதல் பத்து நாட்களிலும் நாம் செய்ய வேண்டிய அமற்கள் என்ன.?

1: ஹஜ்ஜுடன் தொடர்பான அனைத்து வணக்கங்களிலும் ஈடுபடுதல்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1773.
அத்தியாயம் : 26. உம்ரா

2: பர்ளான வணக்கங்களைத் தவறாது நிறைவேற்ற முயற்சி செய்தல்.

3: ஸுன்னத்தான /நபீலான வணக்கங்களின் மூலம் அல்லாஹ்வை நெருங்க முயற்சி செய்தல்.

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அல்லாஹ் கூறினான்:

எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்து விடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன். 91
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6502.
அத்தியாயம் : 82. (தலை)விதி

4: நோன்பு நோற்றல்.

இந்த நாட்கள் முழுவதும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றமைக்கு எந்த சான்றுகலுமில்லை. நாம் செய்யும் ஒவ்வொரு அமலுக்கும் ஜிஹாதை விட சிறந்த கூலி இந்த நாட்களில் கிடைக்கும் என்பதால் விரும்பியவர் ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த நாட்களில் நோன்பு பிடிக்கலாம் அல்லது திங்கள், வியாழன் நோன்பு பிடிக்கலாம் . அதே நேரம் ஒருவர் இக்காலத்தில் ஒன்பது நாள் நோன்பு பிடித்தால் அது தவறும் கிடையாது.

ஹாஜிகளுக்குப் பிறை ஒன்பது அரபா நாளாகும். அந்த நாளில் அரபாவில் இல்லாதோர் பிடிக்க வேண்டிய ஒரு
நோன்புள்ளது .

عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صِيَامُ يَوْمِ عَرَفَةَ، إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ»

அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அரஃபா நாளின் நோன்பு அதற்கு முன்னுள்ள ஓர் ஆண்டு, மற்றும் பின்னுள்ள ஓர் ஆண்டின் குற்றங்களை அழித்து விடும்.
(திர்மிதி: 749)

5:குறிப்பாக அரபாவுடைய நாளில் அல்லாஹ்விடம் நரகத்தை விட்டுப் பாதுகாப்புத் தேடல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாட்களிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். “இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2623.
அத்தியாயம் : 15. ஹஜ்

6: தக்பீர் தஹ்மீது, தஹ்லீல் அதிகமாக செல்ல வேண்டும்.

وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ أَيَّامُ الْعَشْرِ، وَالأَيَّامُ الْمَعْدُودَاتُ أَيَّامُ التَّشْرِيقِ.
وَكَانَ ابْنُ عُمَرَ وَأَبُو هُرَيْرَةَ يَخْرُجَانِ إِلَى السُّوقِ فِي أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ، وَيُكَبِّرُ النَّاسُ بِتَكْبِيرِهِمَا.
وَكَبَّرَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ خَلْفَ النَّافِلَةِ.

(22:28)வசனத்தில் அறியப்பட்ட நாட்களில் இறைவனை திக்ரு செய்யுங்கள் என்பது துல்ஹஜ் பத்து நாட்களாகும். என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.

இப்னு உமர் (ரலி ) யும் ,அபூஹீரைரா (ரலி) யும் துல்ஹஜ் மாதத்தில் முந்தைய பத்து நாட்களில் கடை வீதிக்குச் சென்றால் தக்பீர் சொல்வார்கள். அதைப் பார்த்து மக்களும் சொல்வார்கள். நபிலான தொழுகைக்குப் பிறகும் முஹம்மது பின் அலி (ரஹ்) அவர்கள் தக்பீர் சொல்வார்கள்.

இன்று பலரும் பிறை ஒன்பது முடிவிலிருந்தே தக்பீர் கூறுவதை ஆரம்பிப்பார்கள். இது பிழையான வழிமுறையாகும். துல் ஹஜ் தலைப்பிறை தொடக்கம் அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் முடியும் வரை நாம் தக்பீர், தஹ்மீத், தஹ்லீல் கூற வேண்டும்.

8: அல் குர்ஆனுடன் அதிகம் தொடர்பை ஏற்படுத்துதல்.

9: அதிகமாக ஸதகா கொடுத்தல்.

10: துல் ஹஜ் பிறை பத்து ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாளைக் கொண்டாடுதல்.

11: யவ்முன் நஹ்ர் எனப்படும் பத்தாம் நாளில் அறுத்துப் பலியிடுதல்.

وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ‌ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 29:69)

🎯குறிப்பு:
துல் ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களிலும் ஹஜ்ஜுடைய வணக்கங்கள் மற்றும் உம்ரா, தக்பீர் தஹ்மீத் தஹ்லீல் கூறுதல், அரபா தின நோன்பு, உழ்ஹிய்யா, பொருநாள் தின சட்டங்கள், அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் செய்ய வேண்டியவை தவிர எந்த வணக்கத்தையும் இஸ்லாம் குறிப்பாக்கி சொல்ல வில்லை இந்த நாட்களில் செய்யப்படும் அமற்கள் அல்லாஹ்வுக்கு ஜிஹாதை விட விருப்பமானது என்ற அடிப்படையில் எல்லா நற்செயல்களிலும் நாம் ஈடுபட முடியும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்

✍நட்புடன்:
அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ
2020/07/16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *