அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
COVID 19 CORONA வைரஸ் தொற்று காரணமாக சர்வ உலகமும் கதிகலங்கிப் போயுள்ள நிலையில் இந்த சோதனையிலிருந்து முழு நாட்டையும் மீட்டெடுக்கும் முயற்சியில் பகீரதப் பிரயத்தனம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
சுய தனிமைப்படுத்தலுடன் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த நாம் புனித ரமலானில் பிரவேசித்து நோன்பு நோற்றவர்களாக, ஜும்மா தொழுகைக்குப் பதிலாக ளுஹர்த் தொழுகை ஐவேளைத் தொழுகைகள், கியாமுல் லைல், உள்ளிட்ட இன்னபிற நபிலான வணக்க வழிபாடுகளையெல்லாம் தத்தமது வீடுகளுக்குள்ளேயே நிறைவேற்றி வருகின்றோம்.
இந்நிலையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை நாம் எவ்வாறு கொண்டாடுவோம் என்பது பற்றிய ஒரு சில வழிகாட்டல்களை இங்கு முன்வைக்கின்றோம்.
- பட்டணங்களில் தெருத்தெருவாக அலைந்து திரிந்து ஜவுளிக்கடைகளில் முண்டியடித்துக்கொண்டு இந்த வருடம் துணிமணிகள் கொள்வனவு செய்யும் முயற்சிகளை கைவிடுவோம்.
- இதன் மூலம் இந்த COVID 19 CORONA தொற்றிலிருந்து எங்களையும், சமூகத்தையும், நாட்டையும், பாதுகாத்துக் கொள்வோம்.
- ஆகக்குறைந்தது எதிர்வரும் இரு வார காலத்திற்கான அன்றாட உணவுப்பொருட்களை காலடிக்கு வருகின்ற வியாபாரிகளிடம் பெற்றுக்கொள்வோம்.
- வசதியுள்ளவர்கள் வசதியற்ற ஏழை மக்களுக்கு முடிந்த அளவு உதவி செய்வோம்.
- பள்ளிவாசல்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பிரிவு, சுகாதாரப் பிரிவு, முஸ்லிம் சமய விவகார திணைக்களம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, என்பவற்றின் விதப்புரைகளை தொடர்ந்து அமுல் படுத்துவோம்.
- நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிளும், ஹஜ்ஜுப் பெருநாளிளும், பள்ளிவாயிலில் தொழாமல் திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள். ஆனாலும் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் (ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும்) தனிமைப்படுத்தல் சட்டத்தினை அனுசரித்து சமூக இடைவெளியை பேணிநடக்க வேண்டியவர்களாக இருக்கின்ற காரணத்தால் தத்தமது வீடுகளிலேயே பெருநாள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்வோம்.
மேற்குறித்த ஆலோசனைகளை பின்பற்றியவர்களாக பொறுப்புள்ள பிரஜைகளாக நாம் இந்த ஈத் பெருநாளை கொண்டாடுவோம்.
மேலும் இந்த நோய்த்தொற்றிலிருந்து எமது நாட்டு மக்களையும்,பூரா உலக மக்களையும்,பாதுகாத்து, அல்குர்ஆனையும்,அஸ்ஸுன்னாவையும், பின்பற்றியவர்களாக ஒற்றுமையுடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் அன்புடன் கேட்டுக்கொள்கிறது
ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்
இப்படிக்கு
பொதுச்செயலாளர்
2020_1012