இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) விடுக்கும் வேண்டுகோள்

சர்வதேச ரீதியாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும், விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற வகையில் மஸ்ஜிதுகளில் ஜும்ஆ, ஐவேளை ஜமாஅத் தொழுகைகள், உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்றுகூடல்களையும், உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறும், மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த இடை நிறுத்தத்தை அமுல்படுத்துமாறும் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) நாட்டு முஸ்லிம் மக்களிடம் அன்பாக வேண்டிக் கொள்கின்றது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அறிவுறுத்தல்களை கடைப்பிடித் தொழுகுமாறும், அதனை அமுல்படுத்துவதில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் அக்கறையோடும், தூர நோக்குடனும், நடந்து கொள்ளுமாறும் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் தமது வேண்டுகோளில் மேலும் வலியுறுத்துகின்றது.
மேலும் தத்தமது வீடுகளில் தமது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கூட்டாக (ஜமாத்தாக) தொழுகைகளை நடத்துவதில் பிரச்சினைகள் இருக்காது என்பதையும், உரிய தொழுகை நேரங்களில் பள்ளிவாசல்களில் அதான் சொல்வதில் தவறு இருக்காது என்பதையும், ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் சுட்டிக்காட்டுகிறது.
அதேநேரம் சில ஐரோப்பிய, மேற்க்கத்திய, மத்திய கிழக்கு நாடுகளிலும் பள்ளிவாசல்கள் முழுமையாக மூடப் பட்டுள்ளன. குவைத் நாட்டில் முஅத்தின் மட்டும் பள்ளிவாசலுக்கு வந்து அதான் சொல்ல வேண்டும் எனவும், தொழுகைக்கு வாருங்கள் என்ற வாசகத்துக்கு பதிலாக உங்களுடைய வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறவேண்டும். என்றும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எந்தக் கிராமத்தில் தொற்றுநோய் பரவ ஆரம்பித்து அரசின் நம்பத்தகுந்த உறுதியான வைத்திய அறிக்கைகளை அடிப்படையாக வைத்து நோக்கும்போது உண்மையிலேயே அச்சத்துக்கு உரிய பிரதேசமாக அது மாறி இருந்தால் அது எந்தக் கிராமமாக இருந்தாலும் அங்கு ஜும்மா மற்றும் ஜமாஅத் தொழுகைகளை நிலைநிறுத்தல் ஆகாது என சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் (IUMS) அனைத்து முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது. தொற்றுநோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்து ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக உரிய தரப்பினர் அறிவிக்கும் வரை இந்நிலை தொடரும் என அந்த அமைப்பின் பத்வா மேலும் தெரிவிக்கின்றது.
எனவே நாம் எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஐங்காலத் தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களுக்கு வருபவர்களை முதலாவதாகவும், அடுத்ததாக நம் நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களையும், பாதுகாக்கும் நோக்கிலும் முஸ்லிம் சமூகம் பற்றிய நல்லபிப்பி்ராயத்தை வளர்க்கும் வகையிலும் மேற்குறித்த முடிவை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்டுள்ளது. பல்லின சமூகங்களுக்கு மத்தியில் வாழ்கின்ற நாம் அரசு மேற்கொள்கின்ற ஒரு நியாயமான தீர்மானத்திற்கு ஆதரவாக நடப்பது என்பது சமூகத்தின் இருப்புக்கு ஆரோக்கியமாக அமையும் என்பதே எமது கருத்தாகும்.
எம்மால் முடிந்த அளவு மார்க்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதுடன், அழ்ழாஹ்விடம் தவக்குல் வைத்து பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்.
புகழனைத்தும் அழ்ழாஹ்வுக்கே அழ்ஹம்துலில்லாஹ்

ALM.மன்ஸூர்,
பொதுச்செயலாளர்,
ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *