இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 16-11-2019 சனிக் கிழமை இலங்கை சனநாயக குடியரசிற்கான ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாளாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டு மக்கள் பெரும் பான்மையாக யாருக்கு வாக்களிப்பார்களோ, அவரே இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப் படுவார். போட்டியிடும் வேட்பாளர்களில் தனக்கு விருப்பமான ஒருவரை தெரிவு செய்யும் முழு உரிமையும் மக்களையே சார்ந்ததாகும். நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும், எனது விருப்பு வாக்கை யாருக்கு கொடுக்க வேண்டும்.என்ற முடிவு உங்கள் உள்ளத்தில் இரகசியமாக இருக்கும். அந்த இரகசியமான உங்கள் முடிவை இறுதி வரை இரகசியமாகவே வைத்துக் கொள்ளுங்கள். ஏன் என்றால் இந்த வாக்களிக்கும் முறையும் இரகசிய வாக்களிப்பாகும்.
நான் இவருக்கு தான் வாக்களிப்பேன், இல்லை நான் இவருக்கு தான் வாக்களிப்பேன் என்று பகிரங்கமாக மாறி, மாறி பேசிக் கொண்டு சண்டை சச்சரவுகளிலோ, வீண் வம்புகளிலோ ஈடுபட வேண்டாம். நாமெல்லாம் சகோதரர்கள். மார்க்கத்தின் அடிப்படையில் இறுதி வரை ஒற்றுமையாக இருந்து,நமது ஈமானையும், நமது மக்களையும் பாதுகாப்பது நமது முக்கிய கடமையாகும்.இலங்கை மக்கள் அனைவரும் இன, மத, நிற வேறுபாடின்றி சமத்துவமாக வாழ்வதற்கும்,மேலும் இனங்களுக்கு இடையில் எந்த முறுகல் நிலையும் இல்லாமல், புரிந்துணர்வோடு, சமாதானமாக வாழ்வதற்கும் நமது முழு ஒத்துழைப்புகளையும், பங்களிப்புகளையும் செய்ய வேண்டும்.நமது சமுதாயத்தின் எதிர் கால நலன்களை கருதிற் கொண்டு நமக்கு மத்தியில் உள்ள குரோதங்களையும், வேற்றுமைகளையும் மறந்து நமது சமுதாய ஒற்றுமைக்காக பாடுபடுவோம். இந்த தேர்தலை பயன் படுத்தி, தனிப்பட்ட சொந்த இலாபத்திற்காகவோ, அல்லது கோபதிற்காகவோ, தனிப்பட்டவர்களையோ, சமுதாயத்தையோ பழிகடா ஆக்கி விடாதீர்கள்.
ஆட்சியை கொடுப்பதும் அல்லாஹ், கொடுத்த ஆட்சியை எடுப்பதும் அல்லாஹ். யாருக்கு ஆட்சியை கொடுக்க அல்லாஹ் விரும்புகிறானோ, அவருக்கு ஆட்சியை கொடுக்கிறான்.
எனவே யார் வெற்றிப் பெற்றாலும், வெற்றிக் களிப்பில் யாரையும் மோசமான வார்த்தைகளால் பேசுவது, அல்லது அரசியல் பழிவாங்கும் நிலைக்கோ போய் விடாதீர்கள்.மறுமையை பயந்து பிறர் விசயத்தில் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் யாருக்கு ஆட்சியை கொடுக்கிறானோ அவருடைய உள்ளதையும், அவரை சார்ந்தவர்களின் உள்ளதையும்,அதே போல் எதிர் அணியினர்களின் உள்ளங்களையும் எல்லா மக்களுக்கும் சார்பாக செயல் படுத்துவதற்காக உள்ளங்களை புரட்டக் கூடிய அல்லாஹ்விடமே அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள். குறிப்பாக நமது மக்களின் சுபீட்சத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். அமைதியான முறையில் தேர்தலில் வாக்களிப்போம். அல்லாஹ் நமது பணிகளை பொருந்திக் கொள்வானாக. !